அன்பும் ஒரு சோதனைதான்


 

🖋️🖋️🖋️
அஷ் - ஷேக் மபாஸ் (ஹாமிதீ) 

மனித ஆத்மாவிலிருந்து வரக்கூடியவை, 

இரண்டு :- 
(01) அறிவு,
(02) அன்பு.


எனவேதான் இறைவன் தரக்கூடிய சோதனைகளில் மிக கடுமையானது அன்பை கொண்டு வரக்கூடிய சோதனை. 

அது உடலில் இருந்து உயிரை பிடுங்கி எடுப்பதற்கு சமம். 
வறுமை, நோய், கஷ்டம் போன்ற அனைத்து சோதனைகளையும் பல்லை கடித்து கொண்டு பொறுமை செய்யும் மனிதன் நிலை தடுமாறி போவது இந்த அன்பை கொண்டு செய்யப்படும் சோதனையில் தான்.

ஆனால் சோதனையின் வடிவம் மட்டும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சிலருக்கு பெற்றோரை கொண்டு சோதனை. 
சிலருக்கு பிள்ளைகளை கொண்டு சோதனை. சிலருக்கு மனைவியை கொண்டு சோதனை, இன்னும் சிலருக்கு காதலன் அல்லது காதலி என்ற பெயரில் சோதனை.

அப்பொழுது விடும் கண்ணீருக்கு அளவு இல்லை.
உள்ளம் கவலையால் செத்து, உடலையும் பலவீனமாக்கிவிடும். ஏன் என்னை மட்டும் அல்லாஹ் இப்படி சோதிக்கிறான் என்று உள்ளம் கேட்கும். 

யாரையும் எதையும் பிடிக்காது. அப்பொழுது செய்யாத துஆக்களே இல்லை.
எனக்காக துஆ செய்யுங்கள் என்று சொல்லாத பெரியார்களும் இல்லை. 

நீங்கள் எங்கு சுற்றி எங்கு வந்தாலும் எதுவும் நடக்காது. காரணம் நீங்கள் அல்லாஹ்வின் வேதனையை அனுபவிக்கும் பாவி அல்ல. அவனது சோதனைகளை அனுபவிக்கும் அல்லாஹ்வின் நேசர். 

தன் நேசர்களை புடம் போட்ட தங்கமாக மாற்ற அழ்ழாஹ் கொடுக்கும் மாபெரும் மருந்துதான் இந்த சோதனைகள்.

நோயுற்ற குழந்தை சுகம் அடைய தாய் தன் குழந்தைக்கு மருந்து கொடுக்க முனைகிறாள். மருந்தின் கசப்பினால் மருந்தை குடிக்க முடியாது என்று குழந்தை அழுகிறது அலறுகிறது. கூட சுற்றி நிற்கும் உறவினர்கள் பரிதாபத்துடன் பார்க்கின்றனர். 

வழமையாக தன் குழந்தையின் சிறு அழுகையை கூட தாங்கி கொள்ள முடியாமல், குழந்தை எதை வேண்டுகிறதோ அதை உடனே செய்து விடும் தாய், அப்போது குழந்தையின் விருப்பத்திற்கு எதிராக செயலாற்றுகிறாள். காரணம், அப்போது அவளுக்கு வேண்டியதெல்லாம் தன் குழந்தையின் ஆரோக்கியமும், தன் குழந்தைக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்கிற எண்ணமும் மட்டுமே.

இதேபோல்தான், தன் நேசர்களின் மீது அளவில்லா அன்பு கொண்டுள்ள அழ்ழாஹ் தன் நேசனை, உலக மாயை என்னும் நோயிலிருந்து விடுவித்து இறையண்மை என்னும் சுகத்தை கொண்டு தன்னோடு இணைத்து கொள்ள நாடுகிறான். அப்போது அவன் கொடுக்கும் கசப்பான மருந்துதான் இந்த சோதனைகள்.

தாய் கொடுக்கும் கசப்பான மருந்தை குடிக்காமல் கதறி அழும் குழந்தையை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் உறவினர்கள் யாரும் தாயை ஏசுவதில்லை. தாய் படும்பாட்டை பார்த்து அவள் பாசத்தை புகழ்கின்றனர். மாறாக, குழந்தை அழுதாலும் அதன் விருப்பத்துக்கு மாறான அந்த மருந்தை அது எப்படியும் குடிக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்காக தாய்க்கு உதவியும் செய்கின்றனர்.

இந்த உறவினர்களை போன்றவர்கள் தான் நாம் உதவி தேடி நிற்கும் பெரியார்கள். அவர்கள் நபிமார்களாக இருக்கட்டும், வலிமார்களாக இருக்கட்டும். அவர்களுக்கு உங்கள் உள்ரங்க நிலைமை தெரியும். நீங்கள் இப்போது என்ன செய்யப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் உங்களுக்கு சொன்னால் புரிவதில்லை. காரணம் நீங்கள் குழந்தையின் ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். 

எனவே, நீங்கள் அவர்களிடம் முறையிட்டால், அவர்கள் தற்காலத்தில் லௌகீக உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் வலிமார்கள், உலமாக்கள், பெரியார்கள் என்றால் உங்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவார்கள். இன்ஷா அல்லாஹ் உனக்காக துஆ செய்கிறேன் என்று சொல்வார்கள்.

​​எங்கள் கண்களை விட்டு மறைந்த நபிமார்கள் என்றால், கனவில் அவர்களின் தரிசனத்தின் மூலம் அல்லது கனவில் சில செய்திகளை சொல்வதன் மூலம் வேதனை கொண்ட உங்கள் உள்ளங்களை சாந்தப்படுத்துவார்கள். மருந்து கசப்பிற்கு பயந்து அழும் குழந்தை மீது அன்பு கொண்ட உறவினர்கள் அதன் வாயில் தேனை தொட்டு வைப்பது போல.

ஒன்றை மறந்து விடாதீர்கள், இது போன்ற தருணங்களில்தான் பலர், எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களை கனவில் கண்டு உள்ளனர். அந்த ஆழிய இன்பம், சோதனையின் வலிகளை குறைக்கிறது. உள்ளத்திற்கு இன்பம் கொடுக்கிறது.

இவ்வாறே வல்ல இறைவன் நமக்கு தரும் சோதனைகளை சந்தேஷமாக ஏற்று அவனுக்கு சிரம் பணிவோமாக. 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நடை முறையை பின் பற்றி வாழ்ந்து மீட்சி பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல அழ்ழாஹ் தந்தருள்வானாக.

🖋️🖋️🖋️
அஷ் - ஷேக் மபாஸ் (ஹாமிதீ)

3 comments: