குத்பா வழிகாட்டல்கள்
அஷ்ஷைக் பளீல்
இன்ஷா அல்லாஹ் நாளை (17 ஆம் திகதி) ஜுமுஆ குத்பா நிகழ்த்தவுள்ள ஆலிம்களுக்கு பணிவான சில ஆலோசனைகள்:
கொரோனாவின் இரண்டாவது அலை(Second wave) உலகையும் குறிப்பாக இலங்கையையும் தாக்கி வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் குத்பாவில் பொதுமக்களுக்கு அதுதொடர்பான சில அறிவுறுத்தல்களை வழங்குவது கதீபுகளது பொறுப்பாகும்.
அந்தவகையில் பின்வரும் அம்சங்களை அவர்கள் குத்பாவில் சேர்த்துக் கொள்ளலாம்:-
1. தற்போது உலகில் கொரோனா நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களதும் இறந்தவர்களதும் எண்ணிக்கை.
2. மற்றும் 1918 ஆம் ஆண்டு உலகைத் தாக்கிய ஸ்பானிய காய்ச்சல் (Spanish Flu) தொடர்பான ஒரு சிறு அறிமுகம்.
3. தொற்று நோய்கள் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம்.(இது தொடர்பான ஹதீஸ்கள்)
4. இஸ்லாத்தில் சுத்தமாக இருப்பதன் அவசியமும் தற்காப்பு முயற்சிகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவமும்.
5. நாட்டில் அரசும் குறிப்பாக சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்டிருப்போரும் பொது மக்களது நலன்களைக் கவனத்தில் கொண்டு இட்டிருக்கும் சட்ட திட்டங்கள் ஒழுங்குவிதிகளும் அவற்றைக் கடைபிடிப்பதன் அவசியமும்.
6. இன்ஷா அல்லாஹ் நாம் மிக விரைவில் துல்ஹிஜ்ஜா மாதத்தை அடையவிருப்பதால் அந்த புனித மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்.(பெருநாள் பற்றி அடுத்த வாரம் பேசலாம்)
ஆனால் குத்பாவில் தவிர்க்கப்பட வேண்டிய முக்கியமான சில விடயங்கள் இருக்கின்றன:-
தற்போது உலமாக்களது மட்டங்களில் அகீதாவோடு தொடர்பான சில விவகாரங்கள் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய எந்த ஒரு விளக்கங்களையும் சார்பாகவோ எதிராகவோ ஜும்ஆவில் வழங்குவதற்கு உலமாக்கள் முயற்சிக்கக்கூடாது. காரணம் அவை பொதுமக்களுக்கு எந்த வகையிலும் தேவையற்றவை;பொருத்தமற்றவை. தற்போதுள்ள உலக மற்றும் நாட்டுச் சூழலில் அவர்களுக்கு ஈமானிய பக்குவத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் சொல்லிக் கொடுப்பது தான் மிகவும் முக்கியமான தேவைகளாகும்.
எனவே பொதுமக்களது சிந்தனைகளால் புரிந்துகொள்ளமுடியாத விவகாரங்களையும் அதேவேளை காலத்துக்கு பொருத்தமில்லாத தலைப்புகளையும் குத்பாக்களில் பேசுவதையும் சமூக வலைத்தளங்களில் அலசுவதையும் முற்றுமுழுதாக உலமாக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது மார்க்கத்துக்கும் சமூகத்துக்கும் நல்லதாகும்.
மேலும் கதீப்கள் நேர முகாமைத்துவத்தை கவனத்தில் கொள்வதுடன் பள்ளிவாயல் நிர்வாகம் இது தொடர்பாக போட்டிருக்கும் கட்டளைகளை கவனமாகப் பின்பற்றுவது அவசியம்.
அல்லாஹ் எமது அமல்களை சீராக நிறைவேற்றுவதற்கு அருள் பாலிப்பானாக!
No comments:
Post a Comment