நத்வத்துர் ரஹ்மானிய்யீன் தாளாத துக்கத்தில்
---------------------------------------------------------------------
நேற்றிரவு காட்டுத்தீப் போலப் பரவிய ஒரு ஜனாஸஹ் செய்தி ரஹ்மானிகளுக்கிடையே பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது. நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் ஓர் அங்கமான அஷ்-ஷைக் அஹ்ஸன் ஜவாஹிர் (ரஹ்மானி) அவர்களின் மரணச் செய்தியே அது.
தோப்பூரைச் சேர்ந்த அஷ்-ஷைக் அஹ்ஸன் அவர்கள் ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவில் ஹாபிலாகி பின்னர் அங்கேயே ஆலிமானவர். 2017ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய இருபது பேர் கொண்ட ஆலிம்களுள் அவரும் ஒருவர். அரபு மற்றும் ஷரீஅஹ் கற்கையைப் பூர்த்திசெய்துகொண்டதைத் தொடர்ந்து தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுத் துறையில் உயர் கல்வியைத் தொடரலானார். நேற்று மறையும்போதும் அவர் அப்பல்கலைக்கழகத்தின் மாணவராவார்.
அஷ்-ஷைக் அஹ்ஸன் காலமாகும் வேளை வெறும் இருபத்தைந்து வயதினர். அவரது பெற்றோருக்கு அவர் இரண்டாம் பிள்ளை. திருமண ஒப்பந்தம் நடைபெற்று இரண்டே இரண்டு வாரங்கள்தான். தாம்பத்தியம் தொடங்கவுமில்லை. இவ்வளவு சீக்கிரம் எம்மிடமிருந்து அவர் பிரிந்துசெல்வாரென கனவிலும்கூட எவரும் எண்ணவில்லை.
சக ரஹ்மானிய்யான அஷ்-ஷைக் அஹ்ஸன் வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார் என்றவாறான ஒரு தகவல் வந்து பின்னர் சில மணித்தியாலங்கள் கழிந்து அவர் வபாத்தாகிவிட்டார் என தகவல் வந்திருந்தால் ஓரளவாவது சுதாரித்துக்கொள்ள இலகுவாக இருந்திருக்கும். ஆனால் செய்தி வரும்போதே அஷ்-ஷைக் அஹ்ஸன் மவ்த்தாகிவிட்டார் என்றுதான் வந்தது. துடி துடித்துப்போன நாம் துக்கம் தாள முடியாமல் பரிதவிக்கிறோம்.
அஷ்-ஷைக் அஹ்ஸன் இயல்பாகவே சுறுசுறுப்பானவர். கல்வியில் ஆர்வமுடையவர். கல்விக் கேள்விகளில் சிறப்பான ஈடுபாடு கொண்டவர். இளந்தாரிப் பருவத்தில் இறந்தாலும் இறுதிவரை கற்றுக்கொண்டிருந்தவர். அவர் மறைந்த நாளான நேற்றும்கூட சர்வகலாசலையின் நிகழ்நிலை வகுப்பில் கலந்துகொண்டுள்ளார், விரிவுரையாளரிடம் சந்தேகங்களுக்கு தெளிவு கேட்டுள்ளார். அறிவு தேடிய ஒரு மாணவனாக இருக்கும் நிலையில் அவர் மரணித்திருப்பது அல்லாஹ்வின் பாதையில் அவர் மரணித்ததாகப் பார்க்கவைக்கின்றது.
'மிக அழகானவர்' எனும் பொருள் தாங்கிய அஹ்ஸன் எனும் பெயருக்கொப்ப உடல், சொல், செயல், பண்பு, நடத்தை, குரல் யாவற்றிலும் அழகானவர் அஷ்-ஷைக் அஹ்ஸன். அவரின் புன்னகை தவழும் வதனம் எவரையும் எளிதில் கவர்ந்திழுக்கும். அவரைப் போலவே அழகான அவரின் குரல் அனைவரையும் வசீகரிக்கும். அவரது அன்பும் பண்பும் எல்லோரையும் கொள்ளைகொள்ளும். அவரது நன்னடத்தை மனித மனங்களில் அவரைப் பதியவைத்தது.
ஒரு சிறந்த, கண்ணியமான குடும்பத்தில் பிறந்து வந்தவர் சகோதரர் அஷ்-ஷைக் அஹ்ஸன் அவர்கள். அன்னாரின் தகப்பன் அஷ்-ஷைக் ஜவாஹிர் (நளீமி) அன்பு, பண்பு, அறிவு, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த ஒரு நல்ல, சிறந்த மனிதர். தோப்பூர் அல்-ஹம்ரா மத்திய கல்லூரியின் பிரதி அதிபர்.
நத்வத்துர் ரஹ்மானிய்யீன் இன்றைய தினம் ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கிறது. தனது மூன்றாவது அங்கமொன்றை அது இழந்திருக்கிறது. இதற்கு முன் அஷ்-ஷைக் நசார் ஹழ்ரத் (ரஹ்மானி) மற்றும் அஷ்-ஷைக் மம்ஷாத் ஹழ்ரத் (ரஹ்மானி) என இரண்டு அங்கங்களை அது இழந்திருக்கிறது. மூன்று மர்ஹும் ரஹ்மானிகளையும் அல்லாஹ் தஆலா அங்கீகரித்தருள்வானாக! இருக்கின்ற ரஹ்மானிகளுக்கு கருணையாளன் அல்லாஹ் நீண்ட ஆயுள்களுடன் நலமாக வாழும் பாக்கியமளிப்பானாக!
ரஹ்மானி இரத்தம் அஷ்-ஷைக் அஹ்ஸனின் இறப்பு பெரும் கவலை தருகிறது. இளமையில் அது நடந்திருப்பது கவலையை இரட்டிப்பாக்குகிறது. கலியாண ஒப்பந்தம் நடந்து இரண்டு வாரங்களில் மனைவி அவரை ஆரத்தழுவு முன் மரணம் அவரை ஆரத்தழுவியிருப்பது ஆற்றொனா துக்கத்தைத் தருகிறது. மண வாழ்வு கண்டும் காணாததுமாக மரண வாழ்வு கண்டுள்ளார். இவற்றின் மறைவிலுள்ள இரகசியம் இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம். அந்த மாபெரும் சக்தனின் ஏற்பாட்டைப் பொறுந்திக்கொள்கிறோம்.
அன்புச் சகோதரர் அஷ்-ஷைக் அஹ்ஸனை அவரின் பெற்றோர் என்னென்ன கனவுகளுடன் வளர்த்தார்களோ? அவரின் ஆசான்கள் அவரை என்னென்ன எண்ணங்களுடன் உருவாக்கினார்களோ? அவரது உற்றார் உறவினர் அவரை என்னென்ன உயர்வுகளில் பார்க்க விரும்பினார்களோ? அவரது நண்பர்கள் அவரை என்னென்ன சிறப்புகளில் பார்க்க அவாவுற்றார்களோ? அவரின் ஊரார் அவரை என்னென்ன மேம்பாடுகளில் காண ஆசைப்பட்டார்களோ? அவரைக் கட்டிக்கொண்ட மங்கை அவரை என்னென்ன மேன்மைகளில் காண விரும்பினாளோ? இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி விழிகளும் இதயங்களும் அழுகின்றன.
அன்பு ரஹ்மானி அஷ்-ஷைக் அஹ்ஸனின் பிரிவால் துயருற்று அழுதுகொண்டிருக்கும் அவரது அன்புத் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், அருமை மனைவி, பாச உறவினர்கள், அரும் ஆசான்கள், நேச நண்பர்கள் அனைவரோடும் சேர்ந்து நாம் ரஹ்மானிகளும் துயருறுகின்றோம், அழுகின்றோம். யார் யாருக்கு ஆறுதல் சொல்வதென தெரியவில்லை.
யா அல்லாஹ்! எமது ஓர் உறுப்பு உன்னிடம் வந்து சேர்ந்துள்ளது. அது உன் மேலான குர்ஆனை அகத்தில் சுமந்து வந்துள்ளது. இரவும் பகலும் அதனை ஓதிக்கொண்டிருந்த, படித்துக்கொண்டிருந்த ஓர் அங்கம். ஒரு நல்ல இளம் ஆலிம் அவர். சிறு வயது முதல் உனது உயர்ந்த மார்க்கத்தைக் கற்பதில் ஈடுபட்டிருந்தவர். நல்ல பிள்ளை என பெயர் வாங்கி தனது பெற்றோரை மகிழ்வித்தவர். நல்ல மாணவர் எனப் பெயர் எடுத்து தனது உஸ்தாத்களை அக மகிழச்செய்தவர். குர்ஆன் உடையவர்களுக்கு நீ வழங்கும் அதி உயர்ந்த அந்தஸ்தை, கண்ணியத்தை, உபசாரத்தை எமது சகோதரருக்கு வழங்கிடுவாயாக! அவரை உன் மேலான சுவனத்தின் உயர்ந்த இடத்தில் வாழ்வாங்கு வாழச்செய்வாயாக! அவரின் நற்கிரியைகளை ஏற்றருள்வாயாக! அவரது குற்றங் குறைகளை மன்னித்தருள்வாயாக! எமக்கும் மற்றும் அவரின் இரத்தங்கள், இரக்கங்களுக்கும் பொறுமையை, ஆறுதலை மனோதிடத்தை அளிப்பாயாக!
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
செயலாளர், நத்வத்துர் ரஹ்மானிய்யீன்
1441.11.03
2020.06.25

آمين آمين يارب العالمين
ReplyDelete