பள்ளிவாசல்களை பாதுகாத்தலும் பராமரித்தலும்
✍️ அஷ்-ஷேக் பௌசுல் அமீர்(முஅய்யிதி)
அல்லாஹ்வின் இல்லங்களான பள்ளிவாசல்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பதோடு மட்டும் நின்றுவிடாது அதனை பராமரிக்கும் விடயத்திலும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களமும் வக்பு சபையும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டத்துடன் பயணிப்பதற்கான திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
சமூக மாற்றத்தில் பள்ளிவாசல்களுக்கு மிகப் பெரிய பொறுப்புள்ளது. அதனை நினைத்த விதத்தில், நினைத்தவர் கையில் வழங்கி எமது சமூகத்தையும் பாரம்பரிய கலாச்சார மரபுகளையும் சீரழிக்க முடியாது. இஸ்லாம் காட்டித்தந்துள்ள நிர்வாக தெரிவுகளும் பரிபாலனங்களும் பேணப்பட்டு நிர்வாக ஒழுங்கு பேணப்படும் போது இஸ்லாமிய சமூகம் சகல துறைகளிலும் தலை நிமிர்ந்து வாழும் இஸ்லாமிய சூழலையும் சன்மார்க்கமுள்ள பிரஜைகளையும் உருவாக்க முடியும்.
இதற்காக பல்வேறு காத்திரமான முயற்சிகளையும் பங்களிப்புகளையும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
1. இதுவரை பதிவு செய்யப்படாத அனைத்து பள்ளிவாசல்களையும் பதிவு செய்தவற்கான முயற்சியில் ஈடுபடுதல்.
2. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வருதல்.
3. மாதாந்தம் அனைத்து பள்ளிவாசல்களினதும் வரவு செலவுகளை திணைக்கள அதிகாரிகள் ஊடாக சேகரித்தல்.
4. பள்ளிவாசல் ஊழியர்களின் விபரங்களை திரட்டுதல்.
5. திணைக்களமும் வக்பு சபையும் பள்ளிவாசல் முஅத்தின்கள், இமாம்களுடன் நேரடி தொடர்புகளை பேணுதல்.
6. பள்ளிவாசல் முஅத்தின்கள், இமாம்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்க ஏற்பாடு செய்தல்.
7. பள்ளிவாசல் ஊழியர்களின் பொறுப்புகள், சம்பளம், விடுமுறை, மேலதிக சலுகைகள் போன்றவைகள் எழுதப்பட்டு திணைக்களமும் வக்பு சபையும் கண்காணித்தல்.
8. ஊழியர் சேமலாப நிதி சட்டத்துக்குள் பள்ளிவாசல் ஊழியர்களை உட்படுத்துதல்.
9. பள்ளிவாசல்களுக்கான ஊழியர் வெற்றிடங்கள், ஊழியர்களின் பணி நிறுத்தம் போன்றவற்றில் திணைக்களம் மற்றும் வக்பு சபையின் அனுமதியின்றி பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலையீடுகளை இரத்துச் செய்தல்.
10. பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் பள்ளிவாசல் ஊழியர்களுக்குமான பயிற்சி வகுப்புகளையும் அதற்கான சான்றிதழ்களையும் திணைக்களமும் வக்பு சபையும் வழங்க ஏற்பாடு செய்தல்.
No comments:
Post a Comment